Wednesday, October 13, 2010



தேனியில் எனக்குப் பிடித்த இடங்கள் நிறைய உண்டு. அதில் ஒன்று ரயில் நிலையம். அதற்கு 2 காரணங்கள். ஒன்று, அங்கு அடர்ந்து படர்ந்துள்ள மரங்கள் ஏராளம். இரண்டு, ஒரு நாளைக்கு ஒரு வண்டி ஒரே ஒருமுறை மட்டும் வந்து போகும் . சுதந்திரத்திற்கு முன்பும், லாலு பிரசாத் யாதவ் ரயில்வே மந்திரி ஆவதற்கு முன்பும் சரி, பழமையான கலாச்சாரத்தோடு ஆள் நடமாட்டமே இல்லாமல் இருக்கும். 15 வருடங்களுக்கு முன்பு, புத்தகங்களை எடுத்துக் கொண்டு அங்கு படிப்பதற்காகச் செல்வேன். நானும், பச்சைக் கொடி காட்டும் ஸ்டேஷன் மாஸ்டர் ராஜ கோபாலனும் நல்ல நண்பர்கள். அவருக்கு எடுபிடி வேலைகள் செய்வதற்கு என்னைத் தான் அழைப்பார். அடர்ந்த காடுகளைத் தனியாளாய் உருவாக்கிய மாமனிதர் அவர். யார் வந்து அமர்ந்தாலும் அவர் போடும் சிறு கண்டிஷன், அவர் நட்டுள்ள சிறு நாற்றுகளுக்குத் தண்ணீர் ஊற்ற வேண்டும் என்பது தான். பஞ்ச காலத்தில், குடிநீர் தேவையை ரயில்வே நிலையம் அன்று ஓரளவு பூர்த்தி செய்தது. குடிநீர் வேண்டி வருபவர்களுக்கும் இதே கண்டிஷன்தான். அந்த வகையில் நான் 6 வாகை மரங்களை வளர்க்கும் பொறுப்பாளியாக்கப்பட்டேன். ராஜகோபாலன் ரிடையர் ஆகி சென்னை சென்று, இறந்தும் போய்விட்டார். நானும், மேல்படிப்பு, வேலைதேடல், திருமணம், குழந்தை என்ற லெளகீக வாழ்வில் காணாமல் போனேன். சென்ற வாரம் என் நண்பரோடு, மாலைநேரம் நடந்து போகும்போது, நான் வளர்த்த அந்த வாகை மரம் வேரோடு பிடுங்கி எறியப்பட்டது, அதில் வசித்து வந்த ஒரு பச்சைப் பாம்பு, நாங்கள் யார் தடுத்தும் கேளாமல் தலைநசுக்கி கொல்லப்பட்டது. அதிலிருந்த ஏராளமான அணில் கூடுகளும், காக்கை கூடுகளும் சிதறிப் போயின. 15 வருடம் கம்பீரமாக நின்ற அந்த மரம் கட்டிட விரிவாக்கப் பணிக்காக அகற்றப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது. ஏராளமான மரங்களைக் கட்டிட விரிவாக்கம் கபளீகரம் செய்து விட்டதை உணர முடிந்தது. எப்போதும் குறைந்தது 500 பேராவது நடமாடும் சூழல் உருவாக்கப்பட்டுள்ளது. புதிது புதிதாக ஆட்டோ, கார் ஸ்டேண்ட் வந்துவிட்டது. "ஹெலிகாப்டர் பேட்" அளவிற்கு கிரவுண்ட் உருவாக்கப்பட்டள்ளது. "ஊர் உலகத்திற்கு நல்லது பண்ணனும்னு நெனச்சேல்னா, ஒரு மரம் நடுங்கோ .அது போதும்" என்று சொல்லியே பெரும் காடை உருவாக்கிய அம்மனிதனின் ஆத்மா நிச்சயம் நொந்து போயிருக்கும். "ஒரு மரம் வெட்டப்படும்போது, ஒரு சமுதாயம் பூண்டோடு அழிக்கப்படுகிறது" என்ற ஓஷோவின் வரிகளின் நினைவோடும் மனம் நிறைய வருத்தத்தோடும் அவ்விடம் அகன்றேன்.
காடுகள் எங்கு அழிக்கப்படுகிறதோ அங்கு மட்டும் அதன் தாக்கம் தெரிவதில்லை. உலகெங்கும் அதன் பரவலை உணர முடியும். குறிப்பாக, மழைக்காடுகள் பூமி மண்டலத்தின் நுரையீரலாகச் செயல்படுகிறது. 14% இருந்த மழைக்காடுகள் தற்போது 6% மட்டுமே உள்ளதாக, செயற்கைக்கோள் மூலம் தெரிய வருகிறது.இந்த வகையில் மேற்கொள்ளப்படும் அழிவு 40 வருடங்களில் ஒட்டுமொத்த காட்டையும் அழித்துவிடும் அபாயம் உள்ளது.அமெரிக்கா ,ஐரோப்பியா,ஏன் நம் இந்தியா உட்பட, அண்டை நாடுகளில் உள்ள காட்டை "கை வைப்பதில்" அதிக ஆர்வம் காட்டுகின்றனர். இவ்வாறு வளர்ந்த நாடுகளில் வருடத்திற்கு 1.5 ஏக்கர் அழிக்கப்படுகிறது. மழைக்காடுகளில் மட்டுமே காணப்படும் 137 வகை செடிகள், மிருகங்கள், பூச்சியினங்கள் முற்றோடு அழிந்து விட்டன. மழைக்காடுகள் அழிவதால் பயங்கரமான உயிர்க்கொல்லி நோய்கள் உருவாகின்றன. காடுகளின் அழிவினால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பே இவ்வாறான வைரஸ் கிருமிகளை உருவாக்குகிறது. இன்றும் அத்தியாவசிய, உயிர்க்காக்கும் 121 வகை மருந்துகள் மழைக்காடுகளில் உள்ள மூலிகைகளிலிருந்து தயாரிக்கப்படுகிறது. உலக அளவில், மழைக்காடுகளை அழிப்பதில்,அது எங்கிருந்தாலும் சரி அங்கே புகுந்து தன் நாசக்கரத்தை நீட்டுவதில் மிட்சுபிஷி கார்ப்பரேஷன், டெக்ஸ்கோல் ,ஜார்ஜியா கார்ப்பரேஷன் போன்றவை முன்னணி வகிக்கின்றன. மரங்கள், மூலிகைகள், சிறுபிராணிகளைக் கடத்துவதில் இருந்து, கனிமவளம், அணைகட்டுதல், சாலை அமைத்தல், மின்சார நிலையம் அமைத்தல் என்ற போர்வையில் இயற்கையை நாசமாக்குகின்றனர். இதே வகையான இந்தியாவின் போக்கே ,நேபாளத்தில் பெரும் எதிர்ப்பையும், பின்னடைவையும் சந்தித்துள்ளது. பழங்குடி மக்களும், மாவோயிஸ்டுகளும் ஆயுதம் ஏந்துவதும் இப்பிரச்சினையின் தாக்கத்தால் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. ஐந்து நூற்றாண்டுகளுக்கு முன்பு 10 மில்லியன் சிவப்பு இந்தியர்கள் வாழ்ந்த அமேஸான் காட்டில், அது மூன்று நாடுகளுக்கு உட்பட்டது ,இன்று வெறும் இரண்டு லட்சம் மக்களே வாழ்கின்றனர். இவர்களும் அரசின் நிர்ப்பந்தத்தால் நகரின் மையத்திலும், காடுகளின் ஓரத்திலும்,தங்கள் கலாசாரத்தை இழந்து, நாகரீகம் வலிய திணிக்கப்பட்டு செய்வதறியாது தவிக்கின்றனர். பிரேசிலில் மட்டும் காலனி ஆதிக்கம் ஏற்படுத்தப்பட்டபோது, அந்நாட்டின் பூர்வ குடிகளாக இருந்த 90 வகை பழங்குடியினர் பூண்டோடு கொன்றொழிக்கப்பட்டனர்.
1990 களில் "பிக்மி" பழங்குடி மக்களின் கடைசி சந்ததியினரும் காணாமல் போயினர். அபரிமிதமான மூலிகை அறிவும், காலத்தை சரியாகக் கணித்துக் கூறும் மூன்றாவது பார்வையும் அவர்களிடம் அதிகம் இருந்ததாக "காலனி ஆதிக்க குறிப்பு" கூறுகிறது. எந்த நோய்க்கும் மருத்துவம் ,மாந்திரீகம் ,ஆன்மீகம், விவசாயம் என எல்லா திசைகளிலும், மிக இயல்பாக வாழ்ந்த அம்மக்கள் கொல்லப்பட்டதால், கலை மரபும் மொத்தமாக அழிக்கப்பட்டது. அப்போது கிடைத்த அரைகுறை குறிப்புகளின் மூலம் ஆராய்ச்சி மேற்கொள்ளப் பட்டதின் விளைவாய், அங்கு மட்டும் சுமார் 3,000 வகை மூலிகைகள், புற்றுநோய்க்கு மருந்தாகும் தன்மை கொண்டவை என்பது கண்டறியப்பட்டது . 70 சதவீதம் மழைக்காடுகள் இவ்வாறான அறிய வகை மூலிகைகள் கொண்டதாக உள்ளன. தற்போது வெறும் 25 சதவீத மருந்துகள் மட்டுமே இங்குள்ள மூலிகைகள் கொண்டு தயார் செய்யப்படுவதாக US National Cancer Institute கூறுகிறது. மழைக்காடுகள் மில்லியன் வருடங்கள் பழமை கொண்டவை. ஆனால் நாகரீக மனிதன் 100 வருடங்கள் முன்பு தான் தன் முதல் காலடியை அங்கு பதித்தான். அவன் நுழைந்த உடன் முக்கால் பகுதி காணாமல் போனது என்ற குறிப்பும் அங்கு காணப்படுவது முரண் நகைச்சுவை.
"பயோ டைவர்சிட்டி" பாதிப்பு என்பது அளவிட முடியாத, நிவர்த்தி செய்ய இயலாத பாதிப்பை உருவாக்கும். மழைக்காடுகள் அழிவு இவ்வகையைச் சேர்ந்தது. டாக்டர் .எட்வர்ட் ஓ வில்சன், "1980களில் ஏற்பட்ட பொருளாதார சீர் குலைவு, அணுகுண்டு தயாரிப்பு, பிற நாட்டின் மீதான ஆக்கிரமிப்பு போன்ற செயல்களால் ஏற்பட்ட பாதிப்பை சரி செய்ய சில நூறு வருடங்கள் பிடிக்கும். ஆனால், காடுகளை அழிப்பதால், மரபு ரீதியான பாதிப்பு உருவாகிறது. இயற்கையை அழிப்பதை ஆர்வமுடன் மேற்கொள்ளும் நபர்கள் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். நீங்கள், சரி செய்யவே முடியாத பாதக செயலைச் செய்கிறீர்கள், இதைச் சரி செய்ய பல நூறு வருடங்கள் ஆகலாம் .அல்லது முடியாமலும் போகலாம். நம் சந்ததியினர் மன்னிக்கவே மாட்டார்கள்" என்கிறார். இவ்வாறு மனக்குமுறலோடு கூறும் இவர் ஹார்வர்ட் பல்கலைக்கழகப் பேராசிரியர் ஆவார். ‘புலிட்ஸர்’ விருது பெற்றவர்.
"உலகின் மூச்சுக்குழல்" என அழைக்கப்படும் அமேசான் காடுகளிலிருந்து பூமிக்குத் தேவையான 20 சதவீதம் ஆக்ஸிஜன் உற்பத்தி ஆகிறது. அதிக மழைப் பொழிவு கொண்டதால் இவ்வகையான காடுகள் மழைக்காடுகள் என அழைக்கப்படுகின்றன. ஆண்டிற்கு 1750 மி.மீ. முதல் 2000 மி.மீ அதாவது 100 இஞ்ச் அளவிற்கு மழைப் பொழிவு இருக்கும் .இதனால் ஆறுகள், சிற்றோடைகள், குட்டைகள், தேக்கம் போன்றவை நீர் வளம் பெறுகின்றன. இக்காடுகளில் வறட்சி என்பதே கிடையாது. இக்காடுகள் 4 வகை அடுக்குகள் கொண்டவை. அவற்றில் ஒன்று சுழற்சி முறையில் கை கொடுக்கும். அவை 1. அத்தியாவசிய அடுக்கு ---இது 200 அடி உயர மரங்களைத் தன்னகத்தே கொண்டது. மரத்தின் அகலம் 16 அடி இருக்கும். இங்கு கழுகு, குரங்குகள், வெளவால், பட்டுப்பூச்சிகள் வாழும். இவ்வகையான மரங்கள், நீண்ட நாட்கள் வாழ்பவை. இவை நீண்ட, ஒல்லியான அமைப்பு கொண்டவை. ஒரு கொட்டை, இரு கொட்டை கொண்ட சிறிய பழங்கள் இதன் சிறப்பு,. 2. சுவர் அடுக்கு---சுவர் போல் அடர்த்தியான மரங்கள் கொண்ட பகுதி .இலைகள் மிகச் சிறியதாக, அடர்த்தியாக இருக்கும். பல சிறு உயிர்கள் இங்கு வாழும். பாம்பு, பல்லி ,ஓணான், மரத்தவளை பிரதானமாக வசிக்கும். உலகிலேயே மிகவும் மெதுவாக ஊர்ந்து செல்லும் "ஸ்லாத்" எனும் அரிய வகை உயிரினம் இங்கு காணப்படும். 3. கீழ் அடுக்கு---லேசான சூரிய ஒளிபடும் அளவிற்கு குற்றுத்தாவரங்கள் நிறைந்திருக்கும். நீள இலைகள் ,அடர்த்தியற்று நெடிய தண்டுடன் காணப்படும். 12 அடி உயரம் வளரும் சிறுத்தை, சிவப்புக்கண் தவளை, பல வண்டுகள், பூச்சிகள் வாழும். 4. தரை அடுக்கு --- மிக அடர்த்தியான பகுதியான இது, ஏறத்தாழ இருட்டாகவே இருக்கும். செடிகள் வளரும் சூழல் இருக்காது. இலைகள் மக்க குறைந்தது ஒருவருடம் பிடிக்கும். எப்போதும் ஒருவித நெடி பரவி இருக்கும். எறும்புத்திண்ணி, சிறிய பாம்பரணை, பாம்புகள், பூரான் போன்றவை உயிர் வாழும்.
இரும்பு, அலுமினிய ஆக்ஸைடுகளின் செறிவு அதிகமாக இருப்பதால், மழைக்காடுகளின் மண்வளம் மிகக் குறைவாக இருக்கும். இதைக் கருத்தில் கொண்ட ஐரோப்பிய நாடுகள், அங்கு பரவிக் கிடக்கும் கனிம வளங்களைக் கொள்ளை அடிக்க சுரங்கங்கள் தோண்டின. இது ஒருபுறமிருக்க, பிரேசில், தன் நாட்டின் பொருளாதார வளம், அதன் காடுகளை அழிப்பதில்தான் உள்ளது என பகிரங்கமாய் அறிவித்துள்ளது. மிரண்டுபோன ஐ.நா. சபையும், உலக வங்கியும் தாங்கள் உதவத் தயாராக உள்ளதாகவும், காட்டை அழிக்க வேண்டாம் எனவும் கேட்டுக் கொண்டுள்ளனர். 1999ல் நடந்த காடழிப்பு ,உலகிலேயே மிக மோசமான மழைக்காடழிப்பு என வர்ணிக்கப்படுகிறது. இந்தோனேஷியாவில் அரங்கேறிய இந்தப் பாதகச் செயல், ஒட்டுமொத்த தென் கிழக்கு ஆசிய கண்டத்தையும் பாதிப்புக்கு உள்ளாக்கியுள்ளது. காடழிப்பின் பக்க விளைவுகள் தான் தற்போதைய பருவ கால மாற்றங்கள் என அடித்துக் கூறுகின்றனர் ஆராய்ச்சியாளர்கள். இதனைத் தொடர்ந்து மடகாஸ்கர், இந்தோனேஷியா, பாப்புவா, நியூகினியா போன்றவை காடழிப்பைத் தடை செய்தது. இந்தியாவில் காடுகளையும், இலங்கையில் மழைக்காடுகளையும் அழித்து, நெல், ரப்பர், காபி, கோகோ போன்றவை பயிரிடப்பட்டன. எளிதில் தீப்பிடிக்கக் கூடிய பொருட்கள், காட்டிற்குள் கொண்டு செல்வதும் காடழிப்பின் பிற காரணங்கள். மலேசியா, அதன் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள காடுகளை மொத்தமாக அழித்து நகர்மயமாக்கத் துவங்கியுள்ளது.மரத்தினால் செய்யப்பட்ட வீடுகளை இங்கு சர்வ சாதாரணமாய்க் காணலாம். இவை இடம்பெயர்தலின் அடிப்படையில் செய்யப்படுகின்றன. ஒரு வீடு அமைக்க 20 வருடம் பழமையான 50க்கும் மேற்பட்ட மரங்கள் வெட்டிச் சாய்க்கப்படுகின்றன. மின்சார நிலையங்களும், எரிபொருள் குழாய்களும், பல நூறு கிலோ மீட்டர் தொலைவிற்குச் செல்கின்றன. அறிய வகை பட்டாம்பூச்சிகளும் , பாம்பினங்களும், திசையறியாது இடம்பெயர்கின்றன.
இலங்கையின் மிக மோசமான உள்நாட்டுப் போர், ஒட்டுமொத்த காட்டுவளத்தையும் காணாமல் ஆக்கி விட்டது. பற்றாக்குறைக்கு காட்டை அழித்துப் புதிய "பீச்" களை உருவாக்கியது மிக விசித்திரமானது. ஜார்ஜ் ஆர்வெலின் கதாபாத்திரங்கள், பேசும் மிருகங்கள். இரண்டு மிருகங்களுக்கு இடையேயான உரையாடல் இப்படி இருக்கும். "நீ ஏன் வருந்துகிறாய் நாம் கீழானவர்கள், கொடூரமானவர்கள் என்று.நம்மை விட மற்றொரு கொடூரமான உயிரினம் வாழ்கிறது." இன்னொரு மிருகம் "அது யார்?" என கேட்கும். அதற்குப் பதிலாக வேறு யார் "மனிதன்தான் " என்று கூறும்

Tuesday, October 5, 2010

பூமி நனைத்திட..,மழைக்காடுகள்


நான்
உயர உயர வளர்ந்து
முட்டி மோதி - என்
பருவம் புடைத்து
புனல் பெருக்கி
பூமி நனைத்திட
அந்த மழைக்காடுகள்
எங்கே!
என்றது பெண் மேகம்

நான்
வரண்டு வரண்டு
என் தேகம்
பிளந்து வெடித்து
காய்ந்து இருக்கிறேன்
என் மேனி குளிர
மோகம் கொண்டு
மன்மதத் தாரைகள்
பொழியும்
மேகங்கள் எங்கே!
கேட்டுக்கொண்டது பூமி

என் வெள்ளை மனது
கொள்ளை அழகால்
குளிர்ந்து நிமிந்து
கல் மலையானேன்
அந்த சூரிய ஒளியால்
கருகிக் கருகி - இன்று
உருகி உருகி
கடலாகிறேன்
கண்ணீர் சொரிந்தது
துருவப்பனிக்கட்டிகள்

கரும்புகை - கடும்
பார வாயுக்கள்
பச்சை வீட்டு வாயுக்கள்
பெருக்கம் இவற்றால்
சூரியஒளி வெளியேற்றத்
தடுக்கம்
என் தேகம்
வெப்பத்தால் புழுக்கம் என்று
புழுங்கியது பூமி

முடியவில்லை - புற
ஊதாக் கதிர்கள்
என்னை ஊடுருவுகின்றன
தடுக்க முடியவில்லை
நான்
நலிவுறுகின்றேன் என்னைக்
காப்பாற்றுங்கள்
கதறியது
ஓசோன் படை

ஓ.....!
இதுதான்
கைத்தொழில் புரட்சியின்
கால வெளியீடுகளா..??
உலகமயமாதலின்
உன்னத விளைவுகளா....???

மனம் கொண்ட
மனிதனே!
உலக உருண்டையில்
உன் உயிர்ச்சுவடுகள்
எச்சப்படுமுன்
உலகில் உன்னை
நிச்சயப்படுத்திக்கொள்
உலகைக்காப்பாற்று
உன்னைத் தேக்கிக்கொள்ளலாம்...

--சிதறல்கள்.காம்--

Monday, September 6, 2010